இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்துஅதிநவீன ஏவுகணை தயாரிக்க முடிவு; ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்து

isrel_rocket_launcher

ராணுவத்தின் பலத்தை அதிகரிக்கும் வகையில், இஸ்ரேல் நிறுவனத்துடன் இணைந்து அதிநவீன ஏவுகணை தயாரிக்க முடியாகி உள்ளது. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களை சுட்டு வீழ்த்தும் அதிநவீன ஏவுகணைகள் இந்திய விமானப் படை மற்றும் கப்பல் படையில் உள்ளன. ஆனால், ராணுவத்தில் அதுபோல் எதிரி இலக்குகளை தாக்கி அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் இல்லை. எனவே, நீண்ட தூரம் சென்று எதிரி இலக்கை அழிக்கும் ஏவுகணைகள் வேண்டும் என்று ராணுவம் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது.

கடந்த 2007-ம் ஆண்டு ராணுவத்தில் பிரம்மோஸ் ஏவுகணை சேர்க்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2015-ம் ஆண்டு உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஆகாஷ் ஏவுகணை ராணுவத்தில் இணைக்கப்பட்டது. ஆனால், இந்த ஏவுகணை 25 கி.மீ. தூரம் மட்டுமே பாய்ந்து சென்று எதிரிகளின் ஹெலிகாப்டர்கள், போர் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் படைத்தது.

70 கி.மீ. தூரம் பாயும்

இந்நிலையில் 70 கி.மீ. தூரம் பாய்ந்து சென்று எதிரிகளின் ஏவுகணை, போர் விமானங்கள், ஆளில்லா உளவு விமானங்கள், கண்காணிப்பு விமானங்கள் போன்ற எதையும் தாக்கி அழிக்க வல்லமை படைத்த நடுத்தர அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நாட்டின் ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரீஸ் (ஐஏஐ) நிறுவனத்துடன் இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இணைந்து இந்த அதிநவீன ஏவுகணைகளை தயாரிக்க உள்ளன. இதற்காக ரூ.17 ஆயிரம் கோடியில் இரு நிறுவனங்களுக்கு இடையில் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

வரும் 2020-ம் ஆண்டு முதல் கட்டமாக சில ஏவுகணைகள் தயாரிக்கப்பட்டு ராணுவத்தில் சேர்க்கப்பட உள்ளன. இந்த நடுத்தர அதிநவீன ஏவுகணைகளால் தரையில் இருந்து வானில் 70 கி.மீ. தூரம் உள்ள எந்த எதிரி இலக்கையும் தாக்கி அழிக்கும் திறன் ராணுவத்துக்குக் கிடைத்து விடும் என்று பெயர் வெளியிட விரும்பாத ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

(Visited 21 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *