நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

அரசு அறிவிப்புக்கு எதிராக உத்தரவிட தலைமை நீதிபதி மறுப்பு: நாளைமுதல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம்

18HC CUT_1

வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவுக்கு எதிராக எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தலைமை நீதிபதி மறுப்பு தெரிவித்ததால், நாளை முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை உடன் வைத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

விபத்து எண்ணிக்கையில் தேசிய அளவில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது. எனவே, விபத்துகள், விதிமீறல்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செப்டம்பர் 1-ம் தேதி முதல் வாகன ஓட்டிகள் அசல் ஓட்டுநர் உரிமத்தை கட்டாயம் உடன் வைத்திருக்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. இதை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் ராமசாமி தாக்கல் செய்த பொதுநல மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நிலுவையில் உள்ளது.

இதற்கிடையில், தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவரான சென்னை கொளத்தூர் ஆர்.சுகுமார் தாக்கல் செய்த ஒரு மனுவில், ‘‘அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்ற அரசின் இந்த உத்தரவு லஞ்ச லாவண்யத்துக்குதான் வழிவகுக்கும். இதில் ஏராளமான நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. எனவே, அந்த உத்தரவை அமல்படுத்தக்கூடாது. அதற்கு தடை விதிக்க வேண்டும்’’ என்று கோரியிருந்தார்.

இந்த வழக்கை கடந்த 1-ம் தேதி விசாரித்த தனி நீதிபதி எம்.துரைசாமி, அரசு அளித்த உத்தரவாதத்தை ஏற்று, செப்டம்பர் 5-ம் தேதி வரை வாகன ஓட்டிகளிடம் அசல் ஓட்டுநர் உரிமத்தைக் காட்டச் சொல்லி நிர்ப்பந்தம் செய்யக்கூடாது என உத்தரவிட்டு, இந்த வழக்கை தலைமை நீதிபதியின் அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

விசாரணை தள்ளிவைப்பு

இந்நிலையில், டிராஃபிக் ராமசாமியின் பொதுநல மனு மீதான வழக்கு விசாரணை மட்டும் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் அடங்கிய அமர்வி்ல் நேற்று நடந்தது. அப்போது லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி, எங்கள் வழக்கையும் இந்த வழக்கோடு சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று கோரினர். அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி, இந்த வழக்கை 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தார். அப்போது லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிந்தராமன், ‘‘அதுவரை அசல் ஓட்டுநர் உரிமம் கட்டாயம் என நிர்ப்பந்திக்கக்கூடாது’’ என அரசுக்கு உத்தரவிடுமாறு கோரினார். ஆனால், அதை ஏற்க தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு மறுத்துவிட்டது.

இதனால் வாகன ஓட்டிகள் நாளை முதல், அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். இரு வழக்குகளின் விசாரணையையும் நீதிபதிகள் 8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

(Visited 24 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *