நீதிமன்ற எச்சரிக்கையை அடுத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ்

வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் எப்படி நிறுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்தது. இந்நிலையில் உயர் நீதிமன்ற மதுரை கிளையின் எச்சரிக்கையை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

 

தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசு ஊழியர்க

ள் சங்கங்கள் கூட்டு செயல் குழு (ஜாக்டோ- ஜியோ) சார்பில் 7.9.2017 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதற்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்தது. இருப்பினும் மாநிலம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால் ஜாக்டோ- ஜியோ ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு விசாரணைக்கு வந்தபோது, ஜாக்டோ- ஜியோ நிர்வாகிகள் இன்று ஆஜராக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று காலை விசாரணைக்கு வந்தது. தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத் தலைவர் எம்.சுப்பிரமணியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் தாஸ், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் சங்கத் தலைவர் மோசஸ் ஆகியோர் நேரில் ஆஜராகினர். இவர்கள் சார்பில் ஆஜரான வக்கறிஞர் என்.ஜி.ஆர்.பிரசாத் வாதிடுகையில், ”அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தங்களின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசுடன் கடந்த ஒரு ஆண்டாக பேச்சுவார்த்தை நடத்தி வந்துள்ளனர். இதில் உடன்பாடு ஏற்படாததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது” என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”வேலை நிறுத்தத்துக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. அதன் பிறகும் போராட்டத்தை தொடர்வது தவறு. வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று ஏன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது. வேலை நிறுத்தத்துக்கு தடை விதிக்க நீதிமன்றத்துக்கு அதிகாரம் இல்லை என ஒருவர் கூறியுள்ளார். அவர் என்ன அரசியலமைப்பு சட்டத்தில் நிபுணரா?

காலாண்டுத் தேர்வு தொடங்கியுள்ளது. மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். அம்மாவுக்கு அடுத்த ஸ்தானத்தில் இருப்பவர்கள் ஆசிரியர்கள். அவர்கள் மாணவர்களை பாதிப்படைய வைத்து விட்டு வேலை நிறுத்தத்தில் ஈடுபடலாமா?

வேலை நிறுத்தத்தை உடனடியாக நிறுத்திவிட்டு பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அப்படி வந்தால் திங்கள்கிழமை தலைமை செயலரை நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டு, பேச்சுவார்த்தைக்கு உத்தரவிடப்படும். இல்லாவிட்டால் நீதிமன்ற உத்தரவை எப்படி செயல்படுத்த வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும்” என்றனர்.

தொடர்ந்து வழக்கறிஞர் பிரசாத் வாதிடும்போது, ”வேலை நிறுத்தத்தை திரும்பப் பெற முடியாது” என்றார்.

அதற்கு நீதிபதிகள், ”வேலை நிறுத்தம் கூடாது என்பது நீதிமன்றத்தின் தீர்ப்பு. இந்த தீர்ப்பை யாரும் மீற முடியாது. சம்பளம் உயர்வு பெறுவது அடிப்படை உரிமை. அந்த உரிமை அரசால் மறுக்கப்படும் போது நீதிமன்றத்தை நாட வேண்டியது தானோ. அதைவிடுத்து போராட்டம் நடத்துவதை ஏற்க முடியாது” என்றனர்.

மேலும் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் ஒவ்வொரு நாளும் போராட்டத்தின் போதும் நீதிமன்றத்தையும், நீதிபதிகளையும், வழக்கறிஞர்களையும் எப்படி விளையாட்டு பொருட்களாக சித்தரிக்கின்றனர் என்பதை ஊடகங்களில் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து வழக்கை சிறிது நேரம் ஒத்திவைக்கிறோம். அதற்குள் நிர்வாகிகளுடன் பேசி, வேலை நிறுத்தப் போராட்டத்தை எந்த நிபந்தனையும் இல்லாமல் ஒத்திவைக்க முடிவு செய்து நீதிமன்றத்திற்கு தெரிவிக்க வேண்டும். இல்லாவிட்டால் போராட்டத்தை நிறுத்த என்ன செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு தெரியும் என நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர் வழக்கு சிறிது நேரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் தற்காலிகமாக போராட்டத்தை வாபஸ் பெறுவதாக ஜாக்டோ – ஜியோ நிர்வாகிகள் நீதிமன்றத்தில் உறுதிமொழிக் கடிதம் அளித்தனர். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் ”போராட்டம் குறித்து அரசின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்படும். தமிழக அரசின் தலைமைச் செயலாளரை அழைத்து உரிய தீர்வு காணப்படும். செப்டம்பர் 21-ம் தேதி தலைமைச் செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இன்று பிறபகல் 2 மணிக்குப் பிறகு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பணிக்குச் செல்ல வேண்டும்” என்று உத்தரவிட்டனர்.

(Visited 3 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *