தினமும் 100 பேருக்கு டெங்கு பாதிப்பு

தினமும் 100 பேருக்கு டெங்கு பாதிப்பு; மர்ம காய்ச்சலால் 12 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் அனுமதி: பன்றிக் காய்ச்சலும் பரவத் தொடங்கியது

தமிழகம் முழுவதும் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டு 12 ஆயிரம் பேர் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தினமும் 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவதாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் தீவிரமாக பரவி வருகிறது. டெங்குவின் தீவிரத்தால் பெரியவர்களைவிட குழந்தைகள், பள்ளி சிறுவர்களின் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அரசு மருத்துவமனைகளில் டெங்கு உள்ளிட்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். சென்னையில் மட்டும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். இதற்கிடையில் தமிழகத்தில் பன்றிக்காய்ச்சலால் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சல் தீவிரமடைந்துள்ள நிலையில், தற்போது பன்றிக்காய்ச்சலும் பரவி வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குநர் (டிபிஎச்) டாக்டர் க.குழந்தைசாமி கூறியதாவது:

தமிழகத்தில் கடந்த ஜனவரி 1-ம் தேதி முதல் இதுவரை 11 ஆயிரத்து 500 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்குவால் 35 பேர் உயிரிழந்துள்ளனர். பன்றிக்காய்ச்சலுக்கு 16 பேரும், எலி காய்ச்சலுக்கு ஒருவரும் மற்ற காய்ச்சலால் 68 பேர் என மொத்தம் 85 பேர் உயிரிழந்துள்ளார். அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் டெங்கு, பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 12 ஆயிரம் பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இதில் டெங்கு காய்ச்சலால் மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். தினமும் 100 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றனர். டெங்கு, பன்றிக்காய்ச்சலை தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனவே பொதுமக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம்.

இவ்வாறு டாக்டர் க.குழந்தைசாமி தெரிவித்தார்.

அரசு மருத்துவமனைகளைவிட தனியார் மருத்துவமனைகளில்தான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஏராளமானோர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். தனியார் மருத்துவமனைகளில் டெங்குவுக்கு தேவையில்லாத பரிசோதனைகள், சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் போன்றவைகளை எடுக்க வைத்து பணம் வசூலிக்கின்றனர். டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சென்றால் குறைந்தது ரூ.1 லட்சம் வரை செலவு செய்ய வேண்டியுள்ளது. ஒருவேளை டெங்குவால் பாதிக்கப்பட்டவர் இறந்துவிட்டால், அவரது இறப்புக்கு டெங்கு காய்ச்சல் காரணம் இல்லை என்று சான்றிதழ் கொடுக்கின்றனர். இதுபற்றி மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டால், டெங்குவால் இறந்திருந்தாலும், அப்படித்தான் சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று தங்களிடம் அரசு தெரிவித்துள்ளதாக சொல்வதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

(Visited 6 times, 1 visits today)

Add a Comment

Your email address will not be published. Required fields are marked *